புதன், 12 பிப்ரவரி, 2014

இலங்கையில் இடைவிலகல்




பாடசாலையில் சேரும் பிள்ளைகள் முழுமையான கல்வியைப் பெறாது இடையில் பாடசாலையை விட்டு விலகல் இடைவிலகல் எனப்படும். இவ்வாறான இடைவிலகல் ஒரு கல்விப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. பிள்ளைகள் தேவையான கல்வியைப் பெறாதிருப்பது நாட்டின் வளத்தை வீணவிpரயம் செய்யும் செயலாக இருக்கின்றது. அத்துடன் வாழ்க்கையில் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காமல் விடுவதுடன் இளம் வயதில் கிடைக்கக் கூடிய அனுபவங்களையும் தவற விடுகின்றனர். இடைவிலகும் பிள்ளைகள் சமூகத்தில் காணப்படும் தீய சக்திகளினால் கவரப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.
இடைவிலகலினால் அரசும், பெற்றோரும் செலவிடும் முதலிற்குரிய சரியான விளைவு கிடைக்காமல் போகின்றது. மேலும் பாடசாலையை விட்டு விலகியோரில் பிள்ளைப்பருவ கல்வியை மீண்டும் புனரமைப்பு செய்தல் எனும் புதிய பிரச்சினையை இடைவிலகல் தோற்றுவிக்கின்றது. பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடையில் விலகிச் செல்வதற்கான காரணங்களை நோக்க வேண்டியது அவசியமானதும் முக்கியமானதுமான விடயமாகும். 1979 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வொன்றில் மாணவர்கள் விலகுவதற்குரிய காரணங்களாக பின்வருவன அமைந்தன எனக் கூறப்பட்டுள்ளது.

1.பொருளாதாரக் கஷ்டம் காரணமாக தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருத்தல்
2.ஏதாவதொரு தொழிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருத்தல்.
3.பெற்றோர்களின் தொழிலுக்கு உதவ வேண்டியிருத்தல்.
4.நோயுற்றிருத்தல் ( உடல், உள ரீதியாக )
5.பிறப்பிலுள்ள குறைபாடு
6.வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலான தூரம்
7.பிள்ளைகளுக்கு பாடசாலை மீது வெறுப்பு ஏற்படல்
8.பெற்றோர்களுக்கு பாடசாலை மீது நம்பிக்கை இல்லாதிருத்தல்
9.சில வேளைகளில் பாடங்களிலோ அல்லது ஆசிரியர் மீதோ வெறுப்படைந்து பாடசாலையை விட்டு வெளியேறல்
10.ஒழுக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக பாடசாலையிலிருந்து வெளியேறல்
11.பாலியல் குற்றவாளியாக இருப்பதினால் பாடசாலையிலிருந்து வெளியேறல்
12.சமவயதுப் பிரிவினரிடையே உள்ள செல்வாக்கு காரணமாக கல்வி மீது வெறுப்படைதல்

மாணவர்கள் கல்வியை தொடர்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர். இதனால் சமூகத்திலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றன. மாணவர்கள் இடைவிலகுவதற்கான காரணங்களாக பின்வருவன காணப்படுகின்றன. பொருளாதாரப் பிரச்சினை, பெற்றோர்களின் கவலையீனம், பரம்பரைத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றமை, சாதிப் பாகுபாடு, இளம் வயதில் திருமணம் செய்தல், அதிபர்,ஆசிரியர்களின் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகம், பாடசாலைகளின் இறுக்கமான நிர்வாகம், சூழலின் தாக்கம், வெளிநாட்டு மோகம், சிறு குழந்தைகளைப் பராமரித்தல், பாடசாலைகள் மாணவர்களை ஊக்குவிக்காமை, பாடசாலைக்கும் பெற்றோருக்குமிடையே தொடர்பு குறைவாகக் காணப்படல், முன்பள்ளிக் கல்வி குறைவாகவும் ஒழுங்கான முறையிலும் இல்லாமை, ஆசிரியர் வளப்பற்றாக்குறை போன்றன காணப்படுகின்றன.

3.2 இடைவிலகலுக்கான காரணங்கள்
1. பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும்
2. மாணவர்களின் வரவின்மை
3.  ஒரே வகுப்பில் தங்கியிருத்தல்
4.  கல்விக்கான பிரிவுச்செலவு உயர்வடைதல்
5.  கற்றவர்களிடையே தொழிலின்மை
6. வளப்பற்றாக்குறையும், வளப்பாவனையும்
1. பரீட்சை முறைகளும் கலைத்திட்டமுடம்

பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றின் நோக்கங்கள், பாடவிடயங்கள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவை இயல்பிலேயே ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றது. பரீட்சை முறை ஏதோ ஒரு வகையில் பிரச்சினைக்கு உரியதானால் கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்திலும் உபயோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கலைத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது பரீட்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுப் பரீட்சைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது பாடசாலை மட்டத்தில் மதிப்பீடுகளை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு ஒழுங்கான முகாமைத்துவம் தேவைப்படுகின்றது. அத்துடன் ஆசிரியர்கள் மனப்பாங்குகளையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பரீட்சைகளில் எழுத்துமுறைப் பரீட்சை நம்பிக்கை உரியதாகவும் இலகுவானதாகவும் காணப்படுகின்றது. உயர்கல்விக்கும் தொழிலுக்கும் போட்டி காரணமாக உள்ளதால் பின்வரும் நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சினைகள் உருவாகின்றன.

வகுப்பறைக் கற்பித்தல் பாடவிடயங்களை மட்டும் வழங்குவதுடன் நின்று விடல், எழுத்து மூலம் வெளிப்படுத்தக் கூடிய விடயங்களும், நினைவில் வைத்திருக்கக் கூடிய அம்சங்களும், கவனத்தில் கொள்ளப்படல், சோதனைக்கு ஏற்ற விதத்தில் பொறிமுறைப் பயிற்சியளித்தல், பரீட்சையில் குறைந்த மட்டத்தில் பெறுபேறுகளை பெறுபவர்கள் மீது கவனத்தை செலுத்தாது இருத்தல், தேசிய கல்விக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வசதி இல்லாதிருத்தல், போதனாமுறை என்பவற்றிற்கு வழங்கும் முக்கியத்துவம் குறைவடைதல் ஆகிய காரணங்களால் பரீட்சை முறையை தவறான ஒன்றாக கருதாது ஏற்ற முறையில் நிலை நிறுத்திக் கொள்ள பொருத்தமான வழிவகைகளைக் காண வேண்டும்.

2.மாணவர்களின் வரவின்மை
மாணவர்களின் வரவின்மை காலப்போக்கில் அவர்கள் பாடசாலைகளில் இருந்து நீங்கிச் செல்வதற்கு வழி வகுக்கும். தொடர்த்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகை தராத மாணவருக்கு பாடங்களை உரிய முறையில் கற்க முடியாது போவதால் பாடசாலையிலிருந்து விலகி விடுவான். வரவின்மையானது ஒழுக்கக் கட்டுப்பாட்டை சீர்குலைப்பதுடன் வகுப்பறைக் கற்பித்தலையும் சீர்குலைத்து வகுப்பறைகளில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
மேலும், பரீட்சைகளிலும், மதிப்பீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின்படி கணிப்பீடு செய்வதற்கு வரவின்மை பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மாணவர்களின் வரவு குறைவடைவதால் முகாமைத்துவப் பிரச்சினைகளும் ஏற்படும். வெற்றிகரமான முகாமைத்துவத்திற்கு மாணவர்களின் பங்களிப்பும் ஒத்துளைப்பும் அத்தியாவசியமானவை. மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்படின் பாடசாலைக்கு கிடைக்கும் வளங்களும் குறைவடையும். மாணவர்கள் பாடசாலைக்கு வருதல் கல்விக்கு சமூகமளிக்கும் ஆரம்பக் கட்டமாகும். எனவே இது முழுக்கல்வியமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

3.ஒரே வகுப்பில் தங்கியிருத்தல்
பாடசாலையில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்து வரும் மேல் வகுப்பிற்கு சாதாரணமாக சித்தியடைய வேண்டும். அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான கல்வியடைவை ஒரு மாணவன் பெறாது விட்டால் அவ்வகுப்பில் மீண்டும் கற்றல் வேண்டும். இவ்வாறு தங்கியிருந்து கற்பதற்கு வருட இறுதிப் பரீட்சையில் சித்தியடையாமையே காரணமாகும். ஒரு பிள்ளை சித்தியடையாமைக்கு காரணமாக கற்றல் வேகம், உளர் உளச் சார்பு என்பன குறைவாகக் காணப்படல் காரணமாக அமைகின்றது. இவற்றினை நிவர்த்தி செய்தல் ஆசிரியரின் கடமையாகும்.

ஒரே வகுப்பில் தங்கியிருந்து கற்றலில் பின்வரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
1 மீண்டும் ஒரே வகுப்பில் தங்கியிருக்கும் மாணவர்களால் கல்விக்கு செலவிடப்படும் பணத்தின் அளவு கூடி மேலதிக செலவு ஏற்படுகின்றது.
2.ஒரு வருடத்தில் பாடசாலையில் இடவசதி அளிக்கக் கூடிய மாணவர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதால் சேர்க்கப்படுபவர்களுக்கு இடவசதி குறைவாக இருக்கும்.
3. மீண்டும் தங்கிக் கற்கும் மாணவர்களிடையே விரும்பத்தகாத மனவெழுச்சி நடத்தைகளான    வெட்கம், உதாசீனம், முரட்டு சுபாவம் போன்றவை உருவாகின்றன.
4.மீண்டும் தங்கியிருக்கும் பிள்ளைகளினால் பெரும்பாலும் வகுப்புக்களில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள், வகுப்பறை நிர்வாகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
5. மாணவர் சமூகமயமாக்கப்படுவதிலும் மீண்டும் தங்கியிருத்தல் தாக்கத்தினை ஏற்படுத்தும். இவர்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பழக மாட்டார்கள். இதனால் கூட்டுறவு மனப்பான்மை இல்லாமல் போகின்றது.

4.கல்விக்கான பிரிவுச் செலவு உயர்வடைதல்
பாடசாலையில் அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு மாணவனுக்காகவும் செலவிடப்படும் பணம் பிரிவுச் செலவாகக் காணப்படுகின்றது. இச்செலவுகளாக ஆசிரியர் கொடுப்பனவுகள், ஏனைய உத்தியோகஸ்தர்களுக்கான செலவுகள், கட்டடங்கள், நிலம், தளபாடம், புத்தகங்கள், சீருடைகள், பொறி இயந்திரங்கள் ஆகியன காணப்படுகின்றன.
பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப இச்செலவுகளும் அதிகரிக்கப்படுகின்றது. கல்விக்காக செலவிடப்படும் பணம் நேரடியாக இலாபம் தரக்கூடிய ஒன்றல்ல. உற்பத்தி அல்லது வியாபார நிறுவனங்களில் இடப்படும் மூலதனம் திரும்பப் பெறப்படுகின்றது. இதனால் வரவு செலவை சமப்படுத்திக் கொள்ளலாம். கல்விச் செலவு அவ்வாறு இருப்பதில்லை. எனவே பிரிவுச் செலவுத் தொகை உயர்தல் ஒரு பிரச்சினையாக அமைகின்றது. கல்வியில் வீண்செலவுகள் ஏற்படும் போது பிரிவுச் செலவுத் தொகை அதிகரிக்கின்றது.
அரசு மாணவர்களுக்காக செலவினைச் செய்வது போன்று பெற்றோர்களும் செலவிடுகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. தேவைகள் சிக்கல் வாய்ந்ததாக காணப்படும் இக்கட்டத்தில் பெற்றோர்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு செலவு அதிகரித்துச் செல்கின்றது. அப்பியாசப் புத்தகங்கள், வேறு உபகரணங்கள், பாடசாலைக்கு பல்வேறு வேலைகளுக்காக வழங்கும் பணம், போக்குவரத்துச் செலவு, விளையாட்டு வெளி வேலைகளுக்கான செலவு, பரீட்சைக் கட்டணங்கள் போன்றவை இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறு கல்விச் செலவு உயர்வது மிகச் சிக்கல் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

கல்விக்காக செலவிடப்படும் தொகை அதிகரிப்பதனால் அபிவிருத்திக்கான செலவைக் குறைக்க வேண்டியுள்ளது. ஆனால் அரசினால் மேற்கொள்ளும் கல்விக்கான செலவு குறைக்கப்பட்டால் நாட்டின் பெரும்பகுதியான மக்களுக்கு கல்வி கற்கும் சந்தர்ப்பம் அற்றுப் போகும். அப்போது கல்வித்துறையில் மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட வழி வகுக்கும்.

 5. கற்றவர்களிடையே தொழிலின்மை
முறையான கல்வியைப் போதிய அளவு மட்டத்திற்கு வெற்றிகரமாக பெற்றுக் கொண்டவர்கள் கற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள். க.பொ.த. (சா/த), க.பொ.த (உ/த), கலைமாணிப்பட்டம் ஆகிய கல்வித் தரங்களைப் பெற்றவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் தொழிலின்றி உள்ளனர். அல்லது தகுதிக்கு குறைந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பாடத்தொகுப்பினூடாக கல்வியைப் பூரணப்படுத்தி தராதரப்பத்திரங்களை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் போதியளவு தொழிலுக்கான சந்தர்ப்பங்களை நாட்டின் பொருளாதார முறையின் கீழ் வழங்க வேண்டியிருப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது.

1960 ஆம் ஆண்டின் பின்னர் கலைமாணிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாகி விட்டது. மேலும், விஞ்ஞான, வைத்திய, பொறியியல் ஆகிய துறைகளில் கற்றவர்களுக்கும் பட்டம் பெற்றவர்களுக்கும் தொழில் பெறுவது கடினமாக உள்ளது. கற்றவர்களில் அதிகமானோர் அரச தொழிலை எதிர்பார்ப்பதும் தொழிலில்லாப் பிரச்சினைக்குரிய காரணங்களில் ஒன்றாகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் தொழில்களை செய்யக் கூடியவர்களை உருவாக்கக்கூடிய சரியான கலைத்திட்டம் இல்லாதிருப்பது தொழிலில்லாப் பிரச்சினைக்குரிய காரணங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

6. வளப்பற்றாக்குறையும், வளப்பாவனையும்
கல்விக் கொள்கையானது பின்வரும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1.  எல்லோருக்கும் இலவசமாகக் கல்வியளித்தல்
2.  கல்வியில் சமசந்தர்ப்பம் அளித்தல்

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு அளிக்கக்கூடிய அதியுயர் செல்வத்தினை அளிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. உண்மையில் கல்வியை செயற்படுத்துகையில் இது நிறைவேறாமையை நாம் காணக்கூடியதாக உள்ளது. இதில் ஒரு காரணமாக வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது. கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்குரிய ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல் வேண்டும். இதற்குப் பெருந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. பாடசாலைப் புத்தகங்களை அச்சிடல், விநியோகித்தல், பாடவிதான மாற்றம், ஆசிரியர் பயிற்சி, கல்வியை நவீனமயப்படுத்தல் போனறவற்றுக்கு கூடுதலான அளவு பணம் தேவைப்படுகின்றது. இவற்றைப் பெற்றுக் கொள்ளல் பெரும் பிரச்சினையாக உள்ளது.
மேற்போன்றவற்றுக்கான வளங்களை அதிகரித்தல், உள்ள வளங்களில் இருந்து உச்சப்பயனைப் பெறல், வளப்பகிர்வு போனறவற்றை முறையாகச் செய்ய வேண்டும். இம் மாவட்டத்தில் வளங்களின் உபயோகம் அவற்றை வௌ;வேறு துறைக்கு ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பல குறைபாடுகள் உள்ளன. கல்வித்துறையில் உள்ள மனித வளம் பௌதீகவளம் என்பனற்றிலிருந்து அனேக சந்தர்ப்பங்களில் உரிய பயன் பெறப்படுவதில்லை. தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் பதவிகள் கிடைப்பதில்லை. திறமையின் அடிப்படையில் அன்றி வேறு அடிப்படையிலும் தெரிவு இடம்பெறுவதையும் அவதானிக்கலாம்.
கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. சில பாடசாலைகளில் ஆய்வுகூட கருவிகள் உள்ளன. ஆனால் ஆய்வுகூடமோ அல்லது விஞ்ஞான அறிவோ இல்லை. விஞ்ஞானம் கற்பிக்க ஆசிரியர்களும் இல்லை. சில பாடசாலைகளில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர்கள் இருந்தும் விஞ்ஞான ஆய்வுகூட கருவிகள் இல்லை. சில பாடசாலைகளில் வாசிப்பதற்கு புத்தகங்களோ வாசிகசாலையோ இல்லாமல் இருக்கும். ஆனால் மாணவர்கள் வாசிக்க ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். வாசிப்பதற்கு ஆர்வமில்லாத பாடசாலைகளில் புத்தகங்கள் இருக்கும்.
மேற்கூறப்பட்டவைகள் இலங்கையின் கல்விப் பிரச்சினைகளாக   உள்ளமை குறிப்பிடத்தக்கது.