ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஹமில்டன் கால்வாய்


போர்ட்டிங் போகனும்னு ஆசையா இருந்தா நுவரெலியா போகனும் அல்லது காலிக்குத்தான் போகனும். இப்படி தலைநகரில்  பலரும் சொல்வதை
கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆனால் ஒரு மணிநேரத்திற்குள் அதுவும் தலைநகருக்குள் போர்ட்டிங் போவதற்கும் விடுமுறை நேரங்களை நிம்மதியாக கழிப்பதற்கும் சில இடங்கள் இருக்கின்றது. விடுமுறைக்காக பல ஆயிரங்கள் பணம் செலவழிக்காமல், பயணக்களைப்பு இல்லாமல் போய்வரக் கூடிய இடம் தான் ஹமில்டன். கொழும்பு -15 மட்டக்குளியவில் இருந்து வத்தளை நோக்கி செல்லும் போது நீர்க்கொழும்பு, வத்தளை  பாதைகளை பிரிக்கும் சந்தியில் பாதை ஓரத்திலேயே அமைந்துள்ளது ஹமில்டன் கால்வாய்.
வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் கடதாசி பூக்கள் கரையோரங்களை அலங்கரிக்க அழகாய் அமைந்துள்ளது ஹமில்டன் கால்வாய். வாயிலிலேயே புனித 
அந்தோனியாரின் சிலையும் அருகே ஆலமரத்தடையில் சாந்தமான புத்தபெருமான் சிலையும் காட்சிதருகிறது.


மரங்களின் நிழலில் இளைப்பாறும்வண்ணம் இருக்கைகள் ஹமில்டன் கால்வாயின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் நீண்ட தொங்கு பாலம் இருகரைகளையும் இணைக்கிறது. பாலம் வழியே சென்றால் ஹமில்டனின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.
சிறுவர்களை கவரும் வண்ணம் குறைந்த செலவில்  பாதுகாப்பான முறையில் போர்ட்டிங் சேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக மாலை வேளைகளில் இந்த இடம் களைக்கட்டி இருக்கும். அழகான மின்விளக்கு மின்னும் ஹமில் டனில் சிறுவர்கள் விளையாட, நடந்துத் திரிவதற்கு நல்லதோர் இடமாகவும் பெரியவர்கள் இளைப்பாறிச்செல்ல சிறந்த இடம் ஆகும். 
அதிகம் செலவு செய்யாமல் வித்தியா சமாக உணவருந்தும் இடங்களும் இங்கு அமைக்கப் பட்டுள்ளன. போர்ட்டுக்களில் ஹோட்டல்கள் போன்று அமைக்கப்பட்டு அதில் உணவுகளும் குளிர்ப்பானங்களும் வாங்கிக்கொள்ளலாம்.
நீங்கள் உணவுக்கான ஓடரை கொடுத்துவிட்டு போட்டினுள் இருந்தவாறே புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சுடச்சுட உணவுகளை தயாரித்து கொடுத்து விடுகிறார்கள். இயற்கையை இரசித்தவாறு நீரில் மிதந்துக்கொண்டே உணவருந் தலாம்.
அல்லது ஹமில்டனை சுற்றிலும் சின்னச் சின்ன கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. கைஏந்தி பவன்களும்  அணிவகுத்து நிற்கின்றன. இவற்றில் கிராமத்து சாயலில் அமைந்த உணவுகளும் உள்ளமை சிறப்பம்சமாகும். இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளின் ஓரங்களில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளமையால் நடந்து திரிய வேண்டிய அவசியமில்லை.
கைக்கு எட்டிய தூரத்தில் ஐஸ்கிறீம், பஞ்சுமிட்டாய்களை வாங்கி சுவைத்தபடி அழகாய் பொழுதைக் கழிக்கலாம். ஹமில்டன்  அழகு மட்டுமல்லாது பாதுகாப்பும் மிக்க ஒரு இடம் என்றுதான் சொல்லவேண்டும்.  இங்கு குப்பைகளை வீசுவதற்காக குப்பைத்தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் பாவனைக்காக நீர் குழாய்களும் உள்ளன. இத்தனையும் இலவசமாய்க் கிடைக்க இங்கு சென்று இயற்கையை இரசிப்பவர்கள் சூழலை அசுத்தப்படுத்துவது வருந்தத்தக்கது. பிள்ளைகளுடன் பொழுதைக் கழிக்கவரும் ஒவ்வொருவரும் பொது இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் மனதில்கொள்வது கட்டாயமாகும். 

வெள்ளி, 24 அக்டோபர், 2014

விஞ்ஞான வளர்ச்சியும் ஆபத்தும்

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரை அடுத்த சில வினாடிகளில் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். அந்த அளவுக்கு செல்போன் சேவை இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியால் இணையதளம், செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுக்கப்படாத உண்மை. இணைய தளமோ, செல்போன் சேவையோ ஒருசில நிமிடங்கள் பாதிக்கப்பட்டால் ஏதோ உலகமே துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு.

மன்னர் ஆண்ட காலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குத் தரை வழியாக நடந்து சென்றனர். அதுவே சிறிது காலத்துக்குப் பின் குதிரைச் சவாரி, சாரட் வண்டியைப் பயன்படுத்தி வந்தோம். படிப்படியாக பெட்ரோல், டீசல் மூலம் பயன்படுத்தும் வாகனங்கள் வந்தன. இன்று தரை வழிப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து, வான் வழிப் போக்குவரத்து என போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் ஓர் இலக்கை அடையக் காத்திருக்க வேண்டியதில்லை.

மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்னர் மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் மூலம் எரியும் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் மின்சாரத் தேவையும் அத்தியாவசியமாகிவிட்டது. மின்சாரம் இல்லையெனில், உலகமே இருளில் மூழ்கி விடுகிறது என்பதைவிட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தேக்கம் ஏற்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள்தொகை அதிகரித்து வருவதால் விஞ்ஞான வளர்ச்சியும் இன்று எளிதாகத் தோன்றுகிறது.

பத்து, பதினைந்து ஆண்டுகளில் வியப்பைத் தரும் வகையில் மனித சமுதாயம் வளர்ச்சி பெற்றுள்ளது. சைக்கிள் பயன்பாடு குறைந்த இன்று நடுத்தரப் பிரிவினர்கள்கூட மோட்டார் சைக்கிள், கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் சேவை என்பது தகவல் தொழில்நுட்பத் துறையின் புரட்சி என்று குறிப்பிடலாம். செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செல்போன் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களும், விற்பனை மையங்களும் புற்றீசல்போல் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் 60 கோடிப் பேர் செல்போன் சேவையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் இச்சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது ஒருபுறம். செல்போன்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிர்ச்சி அளிக்கிறது. செல்போன் கோபுரங்கள், செயற்கைக்கோள் போன்றவற்றின் கதிர் வீச்சுத் தாக்கம் காரணமாக வெளவால், சிட்டுக்குருவி, தட்டான் போன்ற அரிய வகைப் பறவையினங்கள் அழிந்து வருகின்றன என வன உயிரின வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பறவையினங்கள் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.

 
இதைவிட செல்போன் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் பெரும்பாதிப்பைத் தருவதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இதன் விளைவாக, செல்போன் சேவைக்கான கோபுரங்கள் குடியிருப்புப் பகுதியில் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் திரும்பிய திசையெங்கும் செல்போன் கோபுரங்கள் கண்ணில்படுகின்றன.

இந்தக் கோபுரங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்திருப்பதால் அதன் கதிர் வீச்சுகளால் மனித உயிர்களுக்கு ஆபத்தைத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்போன் கோபுரம் நிறுவப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதயம் தொடர்புடைய நோய்கள் தாக்குவதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் நாம் சேவைகளை எளிதில் பெறுகிறோம். வேலைவாய்ப்புகள் பெருகி வருகிறது. மனித வளர்ச்சிக்கு விஞ்ஞான வளர்ச்சி உறுதுணையாக இருக்கிறது. ஆனால், மனித உயிர்களுக்குத் தரும் ஆபத்தையும் நாம் உணரவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.