வெள்ளி, 24 அக்டோபர், 2014

விஞ்ஞான வளர்ச்சியும் ஆபத்தும்

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரை அடுத்த சில வினாடிகளில் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். அந்த அளவுக்கு செல்போன் சேவை இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியால் இணையதளம், செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுக்கப்படாத உண்மை. இணைய தளமோ, செல்போன் சேவையோ ஒருசில நிமிடங்கள் பாதிக்கப்பட்டால் ஏதோ உலகமே துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு.

மன்னர் ஆண்ட காலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குத் தரை வழியாக நடந்து சென்றனர். அதுவே சிறிது காலத்துக்குப் பின் குதிரைச் சவாரி, சாரட் வண்டியைப் பயன்படுத்தி வந்தோம். படிப்படியாக பெட்ரோல், டீசல் மூலம் பயன்படுத்தும் வாகனங்கள் வந்தன. இன்று தரை வழிப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து, வான் வழிப் போக்குவரத்து என போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் ஓர் இலக்கை அடையக் காத்திருக்க வேண்டியதில்லை.

மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்னர் மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் மூலம் எரியும் விளக்குகளைப் பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் மின்சாரத் தேவையும் அத்தியாவசியமாகிவிட்டது. மின்சாரம் இல்லையெனில், உலகமே இருளில் மூழ்கி விடுகிறது என்பதைவிட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தேக்கம் ஏற்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள்தொகை அதிகரித்து வருவதால் விஞ்ஞான வளர்ச்சியும் இன்று எளிதாகத் தோன்றுகிறது.

பத்து, பதினைந்து ஆண்டுகளில் வியப்பைத் தரும் வகையில் மனித சமுதாயம் வளர்ச்சி பெற்றுள்ளது. சைக்கிள் பயன்பாடு குறைந்த இன்று நடுத்தரப் பிரிவினர்கள்கூட மோட்டார் சைக்கிள், கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் சேவை என்பது தகவல் தொழில்நுட்பத் துறையின் புரட்சி என்று குறிப்பிடலாம். செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செல்போன் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களும், விற்பனை மையங்களும் புற்றீசல்போல் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் 60 கோடிப் பேர் செல்போன் சேவையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் இச்சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது ஒருபுறம். செல்போன்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிர்ச்சி அளிக்கிறது. செல்போன் கோபுரங்கள், செயற்கைக்கோள் போன்றவற்றின் கதிர் வீச்சுத் தாக்கம் காரணமாக வெளவால், சிட்டுக்குருவி, தட்டான் போன்ற அரிய வகைப் பறவையினங்கள் அழிந்து வருகின்றன என வன உயிரின வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பறவையினங்கள் அழிந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.

 
இதைவிட செல்போன் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் பெரும்பாதிப்பைத் தருவதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இதன் விளைவாக, செல்போன் சேவைக்கான கோபுரங்கள் குடியிருப்புப் பகுதியில் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊருக்குள் திரும்பிய திசையெங்கும் செல்போன் கோபுரங்கள் கண்ணில்படுகின்றன.

இந்தக் கோபுரங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்திருப்பதால் அதன் கதிர் வீச்சுகளால் மனித உயிர்களுக்கு ஆபத்தைத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்போன் கோபுரம் நிறுவப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதயம் தொடர்புடைய நோய்கள் தாக்குவதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் நாம் சேவைகளை எளிதில் பெறுகிறோம். வேலைவாய்ப்புகள் பெருகி வருகிறது. மனித வளர்ச்சிக்கு விஞ்ஞான வளர்ச்சி உறுதுணையாக இருக்கிறது. ஆனால், மனித உயிர்களுக்குத் தரும் ஆபத்தையும் நாம் உணரவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக