செவ்வாய், 9 அக்டோபர், 2012

முயல், ஆமையின் முன்மாதிரி

முன்னொரு காலத்தில் முயல் மற்றும் ஆமையிடையே யாரால் வேகமாக செல்லமுடியும் என்ற வாதம் எழுந்தது. ஓட்டப் பந்தயத்தின் மூலமாக கண்டறிய தீர்மானித்தனர். போட்டி நடக்கும் தேதி, ஆரம்பிக்கும் இடம், முடியும் இடம் போன்றவைகளை முடிவு செய்தன. 

போட்டி தேதியும் வந்தது, போட்டியும் ஆரம்பித்தது. மிகவும் வேகமாக ஓடிய முயல் இலக்கை அடைய சிறிது தூரம் இருக்கும் போது, மிகத் தொலைவில் ஆமை வருவதைக் கண்டு சிறிது இளைப்பாற எண்ணியது. ஆனால் அசதியில் தூங்கிவிட்டது முயல். 

நிதானமாக வந்த ஆமை இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. விழித்து எழுந்த முயல், ஆமை வெற்றி பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. 

இதன் மூலம் நாம் அறிவது : நிதானமாகவும் விவேகத்துடனும் செய்யும் செயலில் நிச்சயமாக வெற்றியடைய முடியும். 

ஆனால் கதை இன்னமும் முடியவில்லை. சில சுவாரசியமான நிகழ்வுகளுடன் தொடர்கிறது கதை. 

தோற்றுப் போனதால் வருத்தமடைந்த முயல் தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தது. தனக்கு சாதகமாகவே அனைத்தும் நடக்கும் என்ற எண்ணம், தன்னால் மட்டுமே முடியும் என்ற தலைகனம், இவைதான் தன் தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்தது. 

இதனால் ஆமையை மறுபடியும் போட்டிக்கு அழைத்தது முயல். ஆமையும் போட்டிக்கு சம்மதித்தது. மறுபடியும் நடந்த போட்டியில், தன்னுடைய குறைகளை முன்பே அறிந்திருந்த முயல் வேகமாக சென்று இலக்கையடைந்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் நாம் அறிவது : சிந்தித்து செயல்படுவதன் மூலம் உறுதியாக வெற்றியடைய முடியும். 

இப்போதும் கதை முடியவில்லை. இம்முறை ஆமை தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தது. 

சிறிது நேரம் யோசித்த ஆமை, முயலை மறுபடியும் போட்டிக்கு அழைத்தது. பந்தயத்திற்கு சற்று வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தது. முயலும் போட்டிக்கு சம்மதித்தது. ஆனால் முயலால் நதிக்கரையை அடையும் வரை மட்டுமே வேகமாக ஓடமுடிந்தது. நதியை கடந்தால் மட்டுமே இலக்கை அடையக்கூடிய நிலை. 

அதிர்ச்சியில் செய்வதறியாமல் நின்றது முயல். சிறிது நேரத்தில் அங்கு வந்தடைந்த ஆமை நிதானமாக ஆற்றை கடந்து இலக்கையடைந்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் நாம் அறிவது : நம்முடைய போட்டியாளரின் பலமறிந்து, பிறகு தன்னுடைய பலத்திற்கேற்ப போட்டியிடும் களத்தை முடிவு செய்ய வேண்டும். 

இன்னும் கதை தொடர்கிறது. இருவரும் போட்டிகளின் மூலமாக நல்ல நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து யோசித்து ஒரு தீர்மானத்தை அடைந்தனர். இறுதியாக, இருவரும் இணைந்து போட்டியில் பங்கு பெற முடிவு செய்தனர். 

போட்டி நாளன்று ஓடும் போது முயல் ஆமையை சுமந்து கொண்டு ஓடியது. நதியை அடந்ததும் ஆமை முயலை தன்னுடைய முதுகில் சுமந்து அக்கரையை அடைந்தது. அக்கரையில் இருந்து மீண்டும் முயல் ஆமையை சுமந்து சென்று இலக்கையடைந்தது. இருவரும் அதுவரை பெறாத சந்தோஷத்தையும், தன்னிறைவையும் பெற்றனர். 
  இதன் மூலம் நாம் அறிவது : தனித்தன்மையுடன் நல்ல ஆரோக்கியமான போட்டியாளருடன் போட்டியிடுவது பாராட்டுக்குரியது. மற்றவர்களுடன் இணைந்து ஒரு குழுவாக செயல் படாதவரைட்டால் மிகவும் எளிய முறையில் வெற்றி பெற முடியும். ஏனென்றால் அனைத்து செயல்களையும், சரிவர செய்ய இயலாது. குழுவாக இணைந்து செயல்படுவதென்பது, சூழ்நிலைக்கேற்ப திறமையானவர்கள் பொறுப்பேற்க முன்வருவதே. 

மேற்கூறிய கதையில் முயலோ ஆமையோ தோல்வியைக் கண்டு சோர்வடையவில்லை. முயல் தன்னுடைய தோல்விக்குப் பிறகு கடினமாக உழைத்தது. ஆமை தன்னுடைய தோல்விக்குப் பிறகு இயன்ற அளவு முயற்சி செய்தது மட்டுல்லாமல் போட்டியிடும் களத்தை மாற்றியமைத்தது. 

வாழ்வில் தோல்விகள் அடையும் போது கடின உழைப்பின் மூலம் அதனை வெற்றியாக மாற்ற முயல்வது ஓரு வகை. வழக்கமான சிந்தனையை மாற்றி முயன்று வெற்றி பெறுவது இன்னொரு வகை. 

சில நேரங்களில் இரு வகையிலும் முயற்சி மேற்கொள்ளும் நிலை ஏற்படும். இந்த உண்மையை முயலும் ஆமையும் உணர்ந்தன. நம்முடைய போட்டியாளருடன் போட்டியிடுவதை விடுத்து போட்டியாளருடன் இணைந்து பிரச்சினைகளை எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எளிதாக இலக்கை அடைய முடியும். 

முயலும் ஆமையும் இணைந்து நமக்கு சொல்லும் பாடங்களாவன : 

* நிதானமாக செயல்படுதல் மூலம் வெற்றியை நிச்சயமாக அடைய முடியும். 

* யோசித்து விரைவாக செயல்படுபவர்கள், நிதானமாக செயல்படுபவர்களை விட எளிதில் வெற்றியை அடைய முடியும். 
குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலமாக வெற்றியை அடைவது நிச்சயம். 

* தோல்வியைக் கண்டு துவளக்கூடாது. 

* போட்டியாளருடன் எதிர்ப்பதை விடுத்து பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழகவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக