சனி, 20 ஜூலை, 2013

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

 
அகழ்வுப் பிரிவின் மூலம் இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் வரலாற்றுக்கு முற்பட்ட மரபுரிமை இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன் பரவிச் செல்கின்றது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்போது செம்மண், மணல் படிமங்கள் விரிவடைந்து சென்ற இலங்கையின் வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்பிரதேசம் மிகமுக்கியமானதாகும். 1972ஆம் ஆண்டில் புந்தல, பத்திராஜவெல ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து வரலாற்றுக்கு முற்பட்ட மனித குடியேற்றத்திட்டங்களின் முக்கியமான இரண்டு காலகட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  1. மத்திய புராதன கற்காலத்திற்குரிய அதாவது, இற்றைக்கு சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித வர்க்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. ஆனால் இங்கு மானிட எச்சங்கள் கிடைக்கவில்லை.
  2. இற்றைக்கு சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய மானிடக் குடியேற்றத்திட்ட காலகட்டம், இது மத்திய கற்காலத்திற்குரியதாகும். மானிடர்களின் அல்லது விலங்குகளின் எச்சங்கள் இல்லாவிட்டாலும்கூட கேத்திரகணித வடிவுடைய நுண்ணிய கற்கருவிகள் பெருந்தொகையாகக் கிடைத்துள்ளன.
அத்துடன் வரலாற்றுக்கு முற்பட்ட குகைகளில் நவீன மானிடர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மானிடர் தொடர்பான சந்தேகமற்ற காரணிகள் குகை குடியேற்றத்திட்டங்கள் மூலமே கிடைக்கின்றன. இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நவீன மானிடனின் வாழ்க்கை முறை, வித்தை முறைகள், தொழில்நுட்பம் போன்றவை பற்றிய விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாய்வுப் பணிகள் முதல் முறையாக 1979ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டன. அதன்போது மூன்று கற்குகைகள் அகழ்வுக்குட்படுத்தப்பட்டன.
  • குருவிட்ட பட்டதொம்ப குகை.
  • ஹொரண பாஹியன் குகை.
  • கேகாலை சாம்பல் குகை.
இவ்வகழ்வுக் கருத்திட்டங்களின் பெறுபேறுகள் கலாநிதி சிரான் தெரணியகல அவர்களின் "The Prehistory of Sri Lanka" மற்றும் கலாநிதி உக்கியக விஜயபால அவர்களின் "New light on the prehistory of Sri Lanka" ஆகிய நூல்களில் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் இத்தகவல்களை காலத்திருத்தம் செய்வதற்காக 2005ஆம் ஆண்டில் பட்டதொம்ப குகை, கித்துல்கல பெலி குகை, பெல்லன்பெந்தி பெலஸ்ஸ போன்ற இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்பாக, குறிப்பாக கரையோர ஈரவலயத்தில் கற்குகைகள் சார்ந்த ப்ளயொஸ்டசீன காலம் முதல் மத்திய ஹொலசீன காலம் வரையில் வாழ்ந்த நவீன மானிடன் தொடர்பாக ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கி 2010ஆம் ஆண்டில் கலாநிதி நிமல் பெரேரா இங்கிலாந்தில் "Bar International Series" 2142ன் கீழ் "Prehistory of Sri Lanka" நூலை வெளியிட்டுள்ளார். இப்புதிய ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையில் குகை குடியேற்றத் திட்டம் இற்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கப்பால் விரிந்து செல்கின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வறண்ட வலய மiழைக்காடுகள் இருந்தன என்பதற்கான காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தெற்காசியாவில் வாழ்ந்த ஆதிமனிதன் பற்றிய காரணிகளும் பட்டதொம்ப குகையிலும் பாஹியங்கல அருகிலும் கிடைத்திருக்கின்றன. இவ்வாதிகால மனிதனின் மிகச் சிறிய கற்கருவிகள் தொழில்நுட்பம், வித்தை முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை தொடர்பாக மிகமுக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
நவீன மானிடன் தொடர்பாகக் கலந்துரையாடுகின்ற போது ஆபிரிக்காவிலிருந்து வெளியேறல் கோட்பாட்டை தொல்பொருள் விஞ்ஞானிகள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். இதன்போது சுமார் ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர் நவீன மானிடன் ஆபிரிக்காவின் கிழக்கில் தோன்றி இற்றைக்குச் சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாஹி குடா நாட்டின் ஊடாக ஒரு பகுதியினர் ஐரோப்பாவுக்கும் இன்னுமொரு பகுதியினர் ஆசியாவினூடாக அவுஸ்ரேலியாவுக்கும் விரிவடைந்து சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதில் மிகமுக்கியமானது தெற்கு நுழைவுப்பாதை என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன்போது சீனாஹியிலிருந்து அரபிக் கரையோரமாக இலங்கை, மலேசியா, இந்தோனேசியா ஊடாக அவுஸ்ரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அதன் பிரகாரம் நவீன மானிடனின் புராதன காரணிகள் தெற்காசியாவில் இலங்கையிலிருந்து கிடைத்துள்ளது.
இற்றைவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் தகவல்கள் பல கருப்பொருட்களில் கிடைக்கின்றன.
  1. இரணமடு மண்ணை ஒழுங்குசெய்தல் - இவை வடக்கு, தெற்கு, வடமேல் கரையோரத்தில் விரிவடைந்திருக்கின்றது.
  2. கற்குகைகள் - நாடு முழுவதிலும் பரவலாக இருக்கின்ற அதேநேரத்தில் கரையோர ஈரவலயத்தின் தென்மேற்கு கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் மேலதிகமாகப் பரவிச் செல்வதைக் காணமுடிகிறது.
  3. வரலாற்றுக்கு முற்பட்ட திறந்த வெளி இடங்கள் - பெல்லன்பெந்தி பெலஸ்ஸ. இவ்விடம் 2005ஆம் ஆண்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் மூலம் இற்றைக்கு சுமார் 13,000 ஆண்டுகள் பழைமையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  4. செந்நிற கபிலநிற மண்வலயம் - உலர் வலயத்தில் இயல்பாக இருக்கின்ற மண் வலயம். வரலாற்றுக்கு முற்பட்ட இடங்கள் இலட்சக்கணக்கில் விரிவடைந்துள்ளன. அநுராதபுர எத்துல் நுவர இற்றைக்கு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என இதன்போது விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  5. வரலாற்றுக்கு முற்பட்ட சிப்பி படிமம் - ஹூங்கம மினி எத்திலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது வரலாற்று காலத்திற்கு முற்பட்ட இவ்விடம் இற்றைக்கு சுமார் 2,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  6. மாதொட்ட - இலங்கையின் கற்காலத்தின் இறுதிக் காலப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்விடம் இற்றைக்கு சுமார் 1,800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கற்குகைகளின் தகவல்களைக் காலத்திருத்தம் செய்வதற்காக 2007ஆம் ஆண்டில் ஹொரண பாஹியன்கல அகழ்வு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், 1986ஆம் ஆண்டில் கலாநிதி விஜயபால அவர்கள் மேற்கொண்ட அகழ்வு வேலையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காலத்திருத்தம் செய்வதாகும். இதன்போது முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட 4 மண் படிநிலைகளை மிக நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்ததை அடுத்து நூறு படி நிலைகளுக்கு மேல் அவை பரவிச் செல்கின்றன என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் ஸ்கொட்லாந்தின் ஸ்டாலின் பல்கலைக்கழகத்தின் தொல்புவிச்சரித பௌதிக பிரிவின் பேராசியர் இயன் சிம்சன் அவர்களின் ஆய்வு பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் பின்வருவன அடங்குகின்றன.
  • நுணுக்கமான மண் பற்றிய ஆய்வு.
  • மெல்லிய மண் படிமங்களைப் பற்றிய பகுப்பாய்வு.
  • மகரந்தப் பகுப்பாய்வு.
  • மிகச் சிறிய கற்கருவிகள் பற்றிய ஆய்வு.
  • கற்கருவிகளின் உற்பத்தி தொழில்நுட்பம்.
  • விலங்கு எச்சங்களின் பகுப்பாய்வு.

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக் காலத்துக்கும் இடைப்பட்ட காலம் இதுவாகும். இந்தக் காலம் முன்னேற்றமடைந்த கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கின்றது. இக்காலத்தில் இலங்கையில் எழுத்து பயன்பாடு தொடர்பான காரணிகள் இல்லாவிட்டாலும்கூட முன்னேற்றகரமான மட்பாண்ட தொழில்நுட்பம், விலங்குகளைப் பழக்குதல், இரும்பு பயன்பாடு, தானியப் பயிர்ச்செய்கை போன்றவை தொடர்பான காரணிகள் கிடைக்கின்றன. இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இக்காலம் கி.மு. 1,300ல் ஆரம்பமாகி கி.மு. 250 வரை விரிவடைந்துள்ளது என்பது தெளிவானதாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு யுகம் எனக் குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் இதில் உள்ள சிறப்பம்சம் யாதெனில், மயான கலாசாரம் விரிவடைந்ததாகும். இந்த பிரபலமான கலாசார அம்சம் பொம்பரிப்பு, யாப்பஹூவ, கொக்அபே, யட்டிகல்பொத்த (கி.மு. 750) இப்பன்கட்டுவ (கி.மு. 700) கலோட்டுவா (கி.மு. 250) ரஞ்சாமடம (கி.மு. 1,300) ஆகிய அகழ்வு தொகுதிகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இம் மயான கலாசாரம் ஆரம்ப வரலாற்றுக் காலத்தின் இறுதிப் பகுதிவரையும் விரிவடைந்து சென்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக