செவ்வாய், 11 டிசம்பர், 2012

சிறிய கடலடி பூகம்பமும் சுனாமியை உண்டாக்கலாம்

இலங்கையில் 2004 டிசமபரில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் பல்லாயிரக்கணக்கானோரை பலி கொண்டது. 2011 ஆம் ஆண்டில் இதே போன்ற கடும் சுனாமி அனர்த்தம் ஜப்பானைத் தாக்கியது. அப்போதும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். ஜப்பானின் கிழக்குக் கரையைத் தாக்கிய சுனாமியால் புகுஷிமா அணுமின்சார நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விபரீத விளைவுகள் ஏற்பட்டன.

இலங்கையிலிருந்து கிழக்கே சுமார்  2000 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலடித் தரையில் ஆழத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாகவே 2004 ஆம் ஆண்டு சுனாமி தோன்றியது. அந்த பூக்ம்பத்தின் கடுமை ரிச்டர் கணக்கில் 9.3 ஆக இருந்தது.

இதே போல  கடந்த ஆண்டில்  ஜப்பானின் கிழக்குக் கரையைத் தாக்கிய கடலடி பூகம்பத்தின் கடுமை  ரிச்டர் கணக்கில் 9 ஆக இருந்தது. இந்த கடலடி பூகம்பம் டொஹோகு கடலடி பூகம்பம் என குறிப்பிடப்படுகிறது.
சுனாமி அலை தோன்றும் விதம்
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்படும் போது அந்த இடத்தில் மேலிருந்து கீழ் வரை  கடல்  நீர் மொத்தமும் மேலே எழும்பிக் கீழே இறங்கும். இவ்விதமாகக் கடல்  நீர் எழும்புவது மூன்று அல்லது  நான்கு அடி உயரம் இருக்கலாம்.  

இதன் விளைவாகக் கடலில் அங்கு தோன்றும் அலையானது நாலா புறங்களிலும் பரவும். நீங்கள் நீர் நிரம்பிய சிறு குட்டையில் கல்லைப் போட்டால் சிறு அளவுக்கு அலைகள் தோன்றி நாலாபுறங்களிலும் பரவுவதைக் கண்டிருக்கலாம். கிட்டத்ட்ட இது மாதிரி தான் கடலில் ஏற்படுகிறது.

கடலடி பூகம்பத்தால் கடலில் எழும் அலையின் அலை நீளம்-- அதாவது அலையின் ஒரு முகட்டுக்கும் அடுத்த முகட்டுக்கும் உள்ள இடை வெளியானது  -- சுமார் 200 கிலோ மீட்டர் வரை இருக்கலாம். ஆகவே அந்த அலைகள் நடுக்கடலில் உள்ள கப்பல்களைப்  பாதிப்பதில்லை. சொல்லப்போனால் தங்களது கப்பலுக்கு அடியில் சுனாமி அலைகள் செல்வதைக் கப்பல் கேப்டனாலும் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால் அந்த அலைகள் கரையை அடையும் போது பேரலையாக உருவெடுத்து நிலப் பகுதிக்குள் புகுந்து அனைத்தையும் அடித்துச் செல்லும். பயங்கர சேதத்தையும் உண்டாக்கும். இதுவே சுனாமி அலையாகும்.கரையைத் தாக்கும் சுனாமி அலைகளின் உயரம் 15 அடியாக இருக்கலாம். 130 அடியாகவும் இருக்கலாம். அது கடலடி பூகம்பத்தின் கடுமையை மட்டுமன்றி கரையோரப் பகுதிகள் அமைந்துள்ள விதத்தையும் பொருத்தது.

நடுக்கடலில் சாதுவாக இருக்கிற சுனாமி அலைகள் கரையை எட்டும் போது மட்டும் ஏன் மிக உயர அலைகளாக மாறுகின்றன என்பது புதிராக இருக்கலாம். இது எப்படி என்பதை அறிய நீங்களே சிறு சோதனையை செய்து பார்க்கலாம். திருமண அழைப்பிதழ் போன்ற சற்றே கெட்டியான அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மேஜை மீது வையுங்கள். அட்டையின் இடது ஓரத்தை இடது கை விரல்களால் அழுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அட்டையின் வலது ஓரத்தை லேசாக அழுத்தியபடி இடது புறம் நோக்கி நகர்த்துங்கள். அட்டையானது புடைத்துக் கொண்டு மேலே எழும்பும்.

சுனாமி அலை கரையை அடைந்த பிறகு மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்படுகின்றது. அவ்வித நிலையில் கரைக்கு வந்து சேரும் அலையானது மேலே கூறப்பட்ட உதாரணத்தில் அட்டை புடைத்து எழும்பியது போல மிக உயரத்துக்கு எழும்புகிறது. சுனாமி அலைகள் கடும் வேகத்தில் தாக்குவதற்கும் காரணம் உள்ளது.

கடலடி பூகம்பம் நிகழ்ந்த இடத்துக்கு மேலே தோன்றும் அலை நாலா புறங்களிலும்  பரவும் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு சுமார் 800 கிலோ மீட்டர் அளவில் இருப்பதால் கரையை வந்தடையும் போது கடும் வேகத்தில் தாக்குகிறது. கிட்டத்தட்ட் வந்த வேகத்தில் கடலை நோக்கித் திரும்பிச் செல்வதால் அனைத்தும் அடித்துச் செல்கிறது.

பொதுவில் கடலடி பூகம்பத்தின் கடுமை ரிச்டர் அளவில் 6.75 க்கு மேல் இருந்தால் சுனாமி அலைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது.   கடலடி பூகம்பம் ரிச்டர் கணக்கில் 9 ஆக இருக்கும் என்றால் அது மிகக் கடுமையானதே

ஆகவே கடுமையான கடலடி பூகம்பங்கள் கடுமையான சுனாமியைத் தோற்றுவிக்கின்றன என்று கருதப்படுகிறது. ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிறு அளவிலான கடலடி பூகம்பங்களும் கடும் சுனாமியை உண்டாக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும் விளக்கமாகச் சொல்வதானால் வேறு ஓர் அம்சம் ஒரு சுனாமியை கடுமையாக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில்லு உள்ளே புதைவதையும் கடலடி பூகம்பத்தால்
 கடல் நீரின் மட்டம் உயருவதையும் இப் படம் விளக்குகிறது.
பூமியின் மேற்புறமானது பல தட்டுக்களால் (Plates) ஆனது. உதாரணமாக இந்தியாவும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியச் சில்லு மீது அமைந்துள்ளது. வட அமெரிகக் கண்டமும் மற்றும் அட்லாண்டிக் கடலின் ஒரு பகுதியும் வட அமெரிக்கச் சில்லு மீது அமைந்துள்ளது. இப்படியான தட்டுக்கள் ஆண்டுக்கு சில செண்டி மீட்டர் வீதம் நகர்ந்து கொண்டிருக்கின்றன. பல பெரிய சில்லுகள் உள்ள அதே நேரத்தில் சிறிய சில்லுகளும் உள்ளன ஜப்பானுக்கு கிழக்கே பல சிறிய சில்லுகள் உள்ளன்.

சில்லுகள்  நகரும் போது ஒன்றிலிருந்து மற்றொன்று விலகலாம். ஒன்றோடு ஒன்று உரசலாம். ஒன்றுக்கு அடியில் இன்னொரு சில்லு புதையுண்டு போகலாம். இப்படி புதையுண்டு போவது பெரும்பாலும் கடல்களுக்கு அடியில் நிகழ்கிறது.( காண்க சில்லுகள் போர்த்திய பூமி )
ஜப்பானுக்குக் கிழக்கே கடலடியில் அமைந்துள்ள சில்லுகள் 
ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியில்  இப்படி ஒரு சில்லு இன்னொன்றுக்கு அடியில் புதையுண்டு வருகிறது. அந்த இடத்தில் 2011 மார்ச் மாதம்  கடலுக்கு அடியில் கடும் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி அலைகள் தோன்றின.

இந்த பூகம்பத்துக்குப் பின்னர் ஜப்பானிய ஆழ்மூழ்குக் கலம் ஒன்று கடலுக்குள் மிக ஆழத்துக்கு இறங்கி மேற்படி கடலடி பூகம்பம் நடந்த இடத்தை விரிவாக ஆராய்ந்து படங்களையும் எடுத்தது. இந்த ஆய்வில் சில விஷயங்கள் தெரிய வந்தன.
 கடலில் மிக ஆழத்துக்கு இறங்கும்
 ஜப்பானின் ஆழ்மூழ்கு கலம்
இந்த ஆராய்வுகளின் போது கிடைத்த தகவல்களை வைத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டான் மெக்கன்சி, ஜேம்ஸ் ஜாக்சன் ஆகிய நிபுணர்கள் புதுக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இது Earth and Planetary Science Letters  இதழில் வெளியாகியுள்ளது.

பொதுவில் இரு சில்லுகள் உரசிச் செல்லும் போது அல்லது புதையுண்டு போகும் போது விளிம்புப் பாறைகள் உடையும். தவிர கடலடி வண்டல்களும் இருக்கும். இவை சில்லுகள் சந்திக்கின்ற இடங்களில் இரு சில்லுகளுக்கு இடையே  ஆப்பு மாதிரி பெரும் குவியலாகச் சேர்ந்திருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Accretionary  Wedge என்று கூறுவர்.இதை ஆப்பு வடிவ சேர்மானம் என்று கூறலாம்.  இது ஏற்கனவே அறியப்பட்ட விஷயம்.
இரு சில்லுகளுக்கு இடையே ஆப்பு வடிவ சேர்மானம் எவ்விதம் அமைந்திருக்கும் என்பதை விளக்கும் படம்
கடலடி பூகம்பம் ஏற்படும் போது அந்த பயங்கர அதிர்ச்சியில் இந்தப் பாறைகளும் வண்டலும் மேலே மிக வேகத்தில் தூக்கி எறியப்பட்டு அதன் விளைவாகத் தான் அங்கு ஏற்பட்ட சுனாமி அலைகள் பயங்கரமான அளவுக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது ஆப்பு செருகப்பட்ட ஓரிடத்தில் ஒரு புறத்திலிருந்து ஓங்கி அடித்தால் அந்த ஆப்பு பயங்கர வேகத்தில் பிய்த்துக் கொண்டு கிளம்பும். அது மாதிரி கடலடி பூகம்பத்தின் போது நிகழ்ந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.
ஜப்பானில் 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி:  ஒரு காட்சி 
இந்த இரு நிபுணர்களும் 1992 நிகராகுவா சுனாமி, 2004 ஆம் ஆண்டு சுமத்ரா சுனாமி, 2006 ஆண்டு ஜாவா சுனாமி உட்ப்ட கடந்த காலத்தில் நிகழ்ந்த சுனாமி பற்றிய தகவல்களை ஆராய்ந்தனர். இந்த சுனாமிகளுக்குக் காரணமான கடலடி பூகம்பங்கள் ஏற்பட்ட இடங்களில் இதே போன்ற நிலைமைகள் இருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இப்போது கடலடி பூகம்பம் ஏற்பட்டால் உடனே சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறது. பல சமயங்களிலும் கடல் ஓரத்தில் வாழும் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். எச்சரிக்கை விடப்படுகின்ற எல்லா சமயங்களிலும் சுனாமி எதுவும் தோன்றுவதில்லை.  எனவே அடுத்த தடவை இப்படி சுனாமி எச்சரிக்கை விடப்படும் போது மக்கள் அதைப் புறக்கணிக்க முற்படுகின்றனர்.

பசிபிக் கடலைச் சுற்றியுள்ள  பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் வீணான எச்சரிக்கைகள் விகிதம் அதிகமாக உள்ளது.  கடலடியில் சில்லுகள் சந்திப்புகளில் ஆப்பு வடிவ  சேர்மானங்கள்  இருப்பதற்கும் சுனாமி தோன்றுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளதால் சிறு கடலடி பூகம்பங்களும் சுனாமியை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிற நிலைமை உள்ளது என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்தோனேசியாவில் ஒரு சமயம்  உறங்கிக் கொண்டிருந்தவர்களை விழிக்கச் செய்யாத அளவுக்கு லேசான கடலடி  பூகம்பம் ஏற்பட்டது. ஆனால்அந்த சிறு  கடலடி பூகம்பத்தின் விளைவாகப்  பேரிரைச்சலுடன் சுனாமி தாக்கியது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆகவே சுனாமி ஆபத்து உள்ள இடங்களில் சில்லுகள் சந்திப்பில இவ்விதம் ஆப்பு வடிவ சேர்மானங்கள் உள்ளனவா என்று ஆழ்மூழ்கு கலங்களைக் கொண்டு கண்டுபிடித்தால் சுனாமி  பற்றி சரியாக கணிக்க இயலும் என்பது அவர்களது கருத்தாகும். இது சுனாமி எச்சரிக்கைகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். என்றும் சுனாமி எச்சரிக்கையை மக்கள் அலட்சியப்படுத்தி உயிரிழக்கின்ற நிலைமைகள் தவிர்க்கப்படும் என்றும் அந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக