வெள்ளி, 7 டிசம்பர், 2012

டிசம்பரில் உலகம் அழியாது!

மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்!



2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியாகக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக நம்பப்பட்டு வருகின்றது. இந்த அச்சத்தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video conference) மூலம் உலக அழிவு குறித்து பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

இக் கூட்டத்துக்கு சமூக ஊடகப் பாவனையாளர்களும் அழைக்கப் பட்டிருந்தனர். மேலும் இதில் விவாதிக்கப்பட்ட உலக அழிவுகள் குறித்தும் அவை எவ்வாறு ஆதாரமற்றவை என நாசா கொடுத்த விளக்கமும் கீழே -

1.நிபிரு அல்லது கோள் X பூமியுடன் மோதும்:

இது பண்டைய சுமேரியர்களின் நம்பிக்கை. தற்போது பிளானெட் X என அழைக்கப்படும் இந்த நிபுரூ கோள் ஒவ்வொரு 3600 வருடங்களுக்கும் ஒவ்வொரு முறை சூரியனைச் சுற்றி அதன் ஒழுக்கில் வருவதாகவும் இவ்வருடம் டிசம்பர் 21 இல் பூமியின் ஒழுக்கில் இது வந்து பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையை 1983 ஆம் ஆண்டே மறுத்திருந்த நாசா இவ்வாறு கூறியுள்ளது. அதாவது நாசாவின் நவீன அகச்சிவப்புக் கதிர் தொலைக்காட்டியால் எடுக்கப்பட்ட 350 000 படங்களிலும் இதன் அடையாளம் இல்லை எனவும் இதை ஏனைய சக்தி வாய்ந்த தொலைக்காட்டிகளும் நிரூபித்துள்ளன எனவும் கூறியுள்ளது.


2.அனைத்துக் கோள்களும் நேர்கோட்டில் வருவதால் அழிவு உண்டாகும்:

இந்நம்பிக்கைப் படி 2012 டிசம்பர் 21 ஆம் திகதி சூரியன், பூமி மற்றும் ஏனைய கிரகங்கள் தமது ஒழுக்கில் நேர்கோட்டில் வருவதுடன் அவற்றை இணைக்கும் கோடு பால்வெளி அண்டத்தின் (Milkyway galaxy) மையத்தை நோக்கி அமையும். இதனால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள அதி நிறை கருந்துளையால் (Supermassive blackhole) ஈர்க்கப்பட்டு அதன் அதீத ஈர்ப்பு விசையால் சிதறடையும் அல்லது ஏனைய கிரகங்களுடனான ஈர்ப்பினால் பாதிக்கப்பட்டு ஒன்றுடன்
ஒன்று மோதிக் கொள்ளும் என்பதாகும்.

இதற்கு நாசா கொடுக்கும் விளக்கம், பூமி சூரியன் மற்றும் ஏனைய கிரகங்களுடன் பால்வெளி அண்டத்தின் மையத்தோடு ஒரே நேர்கோட்டில் வருவது ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நிகழும் சம்பவமாகும். அதிலும் இவ்வருட இறுதியில் அமையவுள்ள இந்த ஒழுங்கு மிக நேர்த்தியானதல்ல. இந்த ஒழுங்கு நிகழ்வது உண்மை என்ற போதும் இதனால் அழிவு ஏற்படும் என நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான உறுதியான ஆதாரம் இல்லை.


3.பூமியின் தரை மேற்பரப்பு 180ட டிகிரியில் சுற்றும் :

இந்நம்பிக்கைப் படி டிசம்பர் 21 இல் புவியின் தரை மேற்பரப்பு தனது 180 டிகிரிக்கு சுழற்சியை மாற்றுவதன் மூலம் துருவப் பகுதிகளை இடம்மாறசெய்யும் எனவும் இதனால் உலக சனத்தொகை முற்றிலும் அழிந்து விடும் எனக் கருதப்படுகின்றது. இதற்கு நாசா அளிக்கும் விளக்கம் பூமிக்கு இருவகையான துருவங்கள் இருப்பதாகவும் அவை புவியியற் துருவங்களின் சுழற்சி மற்றும் காந்தப்புல அம்சங்கள் எனவும் கூறப்படுகின்றது. இதில் காந்தப்புல துருவங்கள் நிலையான ஒரு இடத்தில் பொருத்தப் பட்டவையல்ல என்பதுடன் ஒவ்வொரு வருடமும் இது சிறிதளவு புவியியற் துருவங்களுக்குள் ஊடுருவும். இதன் காரணமாக ஒவ்வொரு 400 000 வருடங்களுக்கு ஒரு முறையே துருவப்பகுதிகள் இடம்மாறும்.

மொரிஷன் எனும் விஞ்ஞானியின் கூற்றுப்படி இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடமாற்றம் சாத்தியமில்லை. இந்த மிகச் சிறிய விஞ்ஞான உண்மை மத புராணக் கதைகளால் திரிவு படுத்தப்பட்டு மூட நம்பிக்கையாக வளர்ந்துள்ளது.


4.கொல்லும் விண்கல் :

டிசம்பர் 21 ஆம் திகதி ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியுடன் மோதி மனித இனத்துக்கு அழிவைக் கொண்டு வரும் என்பதே இந்நம்பிக்கையாகும். இதற்கு நாசா கொடுக்கும் விளக்கம் பூமியின் வளி மண்டலத்தால் முற்றாக எரிக்கப் படாது அதன் தரையை ஒரு விண்கல் அடைய 40 மீற்றர் விட்டமுடைய விண்கல் தேவை. மேலும் இக்குறுகிய விண்கற்கள் கூட சராசரியாக 500 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூமியைத் தாக்குகின்றன. இந்நிலையில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கி பாரிய சேதத்தை விளைவிக்க சில ஆயிரம் முதல் பல இலட்சம் ஆண்டுகள் எடுக்கும்.

இதற்குக் காரணம் தொலைக்காட்டிகளால் நோக்கப் படும் பிரபஞ்ச வெளிப்பகுதியில் கண்ணுக்குத் தென்படாத ஒரு இடத்துக்கு விண்கல் ஒன்று புக இவ்வளவு காலம் ஏற்படும் என்பதுடன் அப்படிப்பட்ட ஒரு விண்கள் பார்வை வலயத்துக்கு வந்து விட்டால் அது பூமியைத் தாக்க பலவருடங்களுக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரலாற்றில் நடைபெற்றிருப்பதாக ஊகிக்கப்படும் மிகப் பெரிய விண்கல் தாக்குதல் இற்றைக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியதில் அக்காலத்தில் கோலோச்சியிருந்த டைனோசர்கள் முற்றாக அழிய நேரிட்டது கூறப்படுகின்றது.


5.சூரிய சூறாவளி :

டிசம்பர் இறுதியில் சூரியனில் மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டு பூமியின் காந்தப் புலங்கள் தகவற் தொடர்பாடல் அனைத்தும் பாதிக்கப் படும் என்பதுடன் சூரியனில் இருந்து பூமிக்குத் தாக்கும் அபாயகரமான கதிர் வீச்சினால் உயிரினங்கள் அழியும் என்பது நம்பிக்கையாகும். இது குறித்து நாசா விளக்கமளிக்கையில் சாதாரண சூரியப் புயல் ஒரு ஒழுங்கில் ஒவ்வொரு 11 வருடங்களுக்கு ஒரு முறையே எப்போதும் நிகழும் ஒன்று எனவும் இதனால் சில செய்மதிகளின் தொடர்பாடல் பாதிக்கப் பட்டிருப்பதும் உண்மை தான். ஆனால் 2012- 2014 காலப்பகுதியில் ஏற்படவுள்ள சூரியப் புயல் அவ்வளவு தீவிரமாக இருக்காது. இந்நிலையில் சூரியப் புயலினால் பாதிப்படையாது இயங்கக் கூடிய நவீன தொலைத் தொடர்பு சாதனங்களை உருவாக்க அமெரிக்கா முனைப்புடன் உள்ளது.

இதேவேளை நாசாவின் 'Ask asn Astrobiologist'' எனும் இணையத்தளத்தில் 2012 உலக அழிவு குறித்து இதுவரை 5000 கேள்விகள் பதியப் பட்டுள்ளன. இதில் 400 முக்கியமான கேள்விகளுக்குப் பதிலும் தரப்பட்டுள்ளது என நாசா கூறியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக