செவ்வாய், 20 நவம்பர், 2012

டைட்டானிக் கப்பல்


 

உலகம் முழுமையும், ஏன் உங்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு பெயர்தான் ‘டைட்டானிக்’.உலகத் திரைப்பட வரலாற்றில், வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி, பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளையும் வாங்கிக் குவித்த ‘டைட்டானிக்’ என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்; அல்லது, கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழிலும் வந்தது. அவ்வப்போது, தொலைக்காட்சிகளில் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இங்கிலாந்து நாட்டில், ‘வெள்ளை விண்மீன் வரிசை’ (White Star Line) என்ற கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமானது ‘டைட்டானிக்’ பயணிகள் சொகுசுக் கப்பல். 1910-11 காலகட்டத்தில், அயர்லாந்து நாட்டின் பெல்ஃபாஸ்ட் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. அன்றைய நாளில், உலகிலேயே அதிக வசதிகள் நிறைந்த, அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கக்கூடிய கப்பல், அதுதான். “எத்தகைய புயல், மழை வெள்ளத்திலும் இந்தக் கப்பல் கடலுள் மூழ்காது” என்று அந்த நிறுவனம் பெருமிதமாக அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கப்பலின் முதலாவது பயணத்தில் இடம் பெறுவதற்காகக் கடுமையான போட்டி நிலவியது. பயணச்சீட்டு கிடைக்காதவர்கள், எதையோ பறிகொடுத்தவர்கள் போல ஆனார்கள். இடம் கிடைத்தவர்கள், எதையோ சாதித்து விட்டதைப் போன்ற உணர்வுடன் கப்பலில் ஏறிக் கையசைத்தார்கள்.

1912 ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 ஆம் நாள், 2224 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் துவக்கியது டைட்டானிக். வடக்கு அட்லாண்டிக் கடலில், ஐந்து நாள்கள் மகிழ்ச்சியான பயணத்துக்குப் பின்னர், அமெரிக்கக் கரையை நெருங்கிக் கொண்டு இருந்தது கப்பல். இன்னும் 375 மைல்களைக் கடந்தால் கரையைத் தொடலாம்.

ஏப்ரல் 15 ஆம் நாள், முன்னிரவு 11.40 மணி. அன்றைய நாளை இன்பமாகக் கழித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்ற பயணிகள் கண் உறங்கத் தொடங்கி இருந்த நேரம். திடீரென ஏதோ ஒரு மோதல்; பலத்த அதிர்ச்சி பயணிகளைத் தாக்கியது.

ஆம்; அட்லாண்டிக் கடலில் மிதந்துகொண்டு இருந்த ஒரு பெரும் பனிப்பாறையில் கப்பல் மோதி விட்டது. அதனால், கப்பலில் பல இடங்களில் துளைகள் விழுந்தன. அந்த ஓட்டைகளின் வழியாகக் கடல் நீர் உள்ளே புகுந்தது; ஒவ்வொரு அறையாக நீர் நிரம்பியது; கொஞ்சம் கொஞ்சமாகக் கப்பல் கடலுள் மூழ்கத் தொடங்கியது.

கப்பலில் 20 உயிர் காப்புப் படகுகளே இருந்தன. உயிர் தப்புவதில் பெண்கள், குழந்தைகளுக்கு முதல் இடம் என்ற அடிப்படையில், அவர்கள் அதில் ஏற்றப்பட்டனர். அதற்குப்பிறகு, முதல் வகுப்புப் பயணிகளுள் சிலர் இடம் பிடித்தனர். இரண்டாம் வகுப்புப் பயணிகள்தாம் பெரும்பாலும் மாட்டிக்கொண்டனர்.

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் கழித்து, டைட்டானிக் கப்பல், 1514 பேர்களுடன் கடலுள் மூழ்கி மறைந்தது. உயிர்காப்புப் படகுகளில் ஏறிய 710 பேர்கள் உயிர் தப்பினர். 12,415 அடிகள் (3784 மீட்டர்) ஆழத்தில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டது. பாதுகாப்பான கப்பல் என்ற பெருமையுடன் பயணத்தைத் துவக்கியது; பாதுகாப்பற்ற பயணமாக மாறியது.


இதற்குப் பிறகுதான், உலக நாடுகள் விழித்துக்கொண்டு, 1914 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டைக் கூட்டி, கடல் பயணப் பாதுகாப்புக்கான விதிகளை வகுத்தன. International Convention for the Safety of Life at Sea (SOLAS). அவைதாம், இன்றைக்கும் உலகம் முழுமையும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் அவ்வப்போது தேவைக்கு ஏற்ற திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

டைட்டானிக் பற்றிய கதைகள், கட்டுரைகள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நீண்ட நெடுங்காலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன. கடலுக்கு அடியில் கிடக்கின்ற அந்தக் கப்பலைத் தேடும் பணியில் பல நிறுவனங்கள், பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தன. அதன் விளைவாக, 1985 ஆம் ஆண்டு, அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, கடலுள் மூழ்கிய எத்தனையோ கப்பல்கள், கடலின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்த டைட்டானிக் கப்பலின் கதையோடு ஒரு இளஞ்ஜோடியின் காதலையும் இணைத்து ஒரு திரைப்படமாக எடுத்து வரலாறு படைத்தார் ஜேம்ஸ் கேமரூன். அந்தத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கின்ற அந்தக் கப்பலைக் காட்டுவார். அங்கிருந்துதான், படம் தொடங்குகின்றது. அதிலிருந்து, கப்பல் மூழ்கியபோது நடைபெற்ற உணர்ச்சிப் போராட்டங்களை, அந்தக் கடைசிக் கட்டக் காட்சிகளை, அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ஜேம்ஸ் கேமரூன்.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக