ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஓசோன் படைப் பாதுகாப்பும் அதன் அவசியமும்

நம் பூமிப் பந்தை ஒரு வாயுப்போர்வை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அலாக்காக, அற்புதமாக மூடி வைத்திருக்கிறது. அதுதான் வளிமண்டலம். வளிமண்டலம் என்பது பல்வேறு வாயுக்களின் கலவையே. இந்த வாயு மண்டலக் கலவையை, நம் புவியின் ஈர்ப்பு சக்திதான் வளிமண்டலம் எங்கும் விரிந்து பரந்து, பறந்து, பறந்து ஓடிப்போகாமல் இழுத்து பத்திரமாய் வைத்திருக்கிறது. இந்த வளிமண்டலம் இல்லாவிட்டால், இந்த உலகில் உயிரினங்களே வாழ முடியாது. நம் பூமி வெப்பத்தில் பொரிந்து போகாமல் பாதுகாப்பாக இருப்பதும் இந்த வளிமண்டலத்தால்தான். நமது தாயகமான சூரியனிடமிருந்து வரும் புறஊதாககதிர்களை வளிமண்டலம் உட்கிரகிக்கிறது; இதனால் வெப்பத்தை தன்னிடம் தக்க வைத்து, புவியின் மேற்பரப்பை மிதமாய், உயிரினங்கள் வாழும் தன்மையதாய் சூடாக்குகிறது. இதன் மூலம் வெப்ப நிலை உயர்வையும் இது கட்டுப்படுத்துகிறது. பகல் இரவு வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது.
 
 வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் அதிகம் இருப்பது நைட்டிரஜன், ஆக்சிஜன், ஆர்கான் மற்றும் கரியுமில வாயு ஆகியவையே. மற்றவைகள் மிகக் குறைவாகவே உள்ளன. நைட்டிரஜன் 78 .4 %, ஆக்சிஜன் 20 .946 %; ஆர்கான் மற்றும் 0.934 %; கரியுமில வாயு 0..039 % இருக்கிறது. மற்ற வாயுக்கள் மிக மிகக் குறைந்த அளவே உள்ளன. நியான் 0.001818 %., ஹீலியம் 0.000524 %; மீத்தேன் .0000179 %; கிரிப்டான் 0.000114 %; ஹைடிரஜன் 0.000055 %; நைட்ரஸ் ஆக்சைடு 0.00003 %;. கார்பன் மோனோ ஆக்ஸைடு 0.00001 %; சினோன் 0.000009 %; ஓசோன் 0.000007 % 0.௦ to 0.07 ppmv (0 to 7x10 -6 %); நைட்டிரஜன் ஆக்சைடு 0.000002 %; ஐயோடின் 0.000001 %; மிகக் குறைந்த அளவு அம்மோனியா மற்றும் நீராவி..குறைவாகவே உள்ளது.  

ozone_layer

 
 ஓசோன் அடுக்கு என்பது வளிமண்டலத்தின் அடுக்குகோளத்தைச் (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும். இது பூமிலிருந்து சுமார் 15 கி.மீ உயரத்திலிருந்து, 15-30 கி.மீ தூரம் வரை (சுமார் 20 கி.மீ கனத்தில்) பரவி இருக்கிறது. இந்த ௨௦ கி.மீ உயரம் பரவி உள்ள ஓசோனை அப்படியே அமுக்கி அடைத்தால் அதன் கனம் சுமார் 3 மீ.மீ அளவுதான் இருக்கும். ஆனால் இதன் கனம்என்பது பருவ நிலைக்கு ஏற்பவும், பூமியின் மேற்பரப்பில் துருவ மற்றும் நிலநடுக்கூட்டிலும் அளவு வேறுபடுகிறது. இந்த ஓசோன் தான் சூரியனிடமிருந்து வரும், உயிரிகளுக்கு கேடு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களை சுமார் 97%-99% வடிகட்டி விடுகிறது. எனவே நாம் அதன் தாக்குதலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருக்கிறோம். 
 
 பொதுவாக பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல, காற்றின் அழுத்தமும், அடர்வும் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெப்பம் அப்படி இல்லை. பல இடங்களில் பல உயரத்தில் வெப்ப மாறுபாடு ஏராளமாக உள்ளது. பூமியின் வளிமண்டலம் வரிசையாக 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பூமிக்கு அருகில் இருக்கும் அடுக்கு கனமாகவும், அதிக உயரத்தில் இருக்கும் அடுக்கு மிக மெலிதாகவும் இருக்கிறது. மேலே உள்ள அடுக்கு மட்டும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வான்வெளியுடன் இரண்டறக் கலந்துவிடுகிறது. பூமியின் முதல் அடுக்கான அடிவளி மண்டலம் (Troposphere) தரைக்கு மேலே, சுமார் 19 கி.மீ உயரம் வரை பரவி உள்ளது. ஆனால் இது துருவத்தில் இதன் கனம் 9 கி.மீ ஆகவும், நில நடுக்கோட்டுப் பகுதியில் 17-19 கி.மீ உயரம் உள்ளதாகவும் உள்ளது. இந்த பகுதியில்தான் நமது சீதோஷ்ணநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. பூமியின் தரையை ஒட்டிய பகுதிகள் வெப்பமாகவும், உயரே செல்ல, செல்ல வெப்பம் குறைவாகவும் உள்ளது.

இதற்கு அடுத்த இரண்டாவது அடுக்கு மீவளி/அடுக்கு மண்டலம்(Stratosphere). இதற்கும் அடிவளி மண்டலத்திற்கும் இடையில் ட்ரோபோபாஸ்/ சேணிடை/சிற்றிடை அடுக்கு உள்ளது(Trophopause). இது ட்ரோபாபாஸிலிருந்து சுமார் 51 கி.மீ உயரம் வரை நீண்டிருக்கிறது. பெரும்பாலான விமானங்கள் பறப்பது இந்த பகுதியில்தான். ஆனால் இங்கே.. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இதன் அடிப்பகுதியில் உள்ள ஓசோன் அடுக்கு வெப்பத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. ட்ரோபோபாஸின் அருகில் வெப்பம் -60 டிகிரியாக இருக்கும். ஆனால் மீவளி மண்டலத்தின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு மேலே, மீவளி பாஸ்(Stratopause) உள்ளது. இது மூன்றாம் அடுக்கான இடை/நடு மண்டலம் (Mesosphere) 51 -55 கி.மீ வரை பரவி கிடக்கிறது. இங்கே காற்றின் அழுத்தம் கடல் மட்டத்திலிருந்து 1 /1000 மடங்காகும். இங்கேதான் விண்கற்களும், பாறைத் துண்டுகளும் எரிகின்றன.

அடுத்த 4 வது அடுக்கு வெப்பமண்டலம்(Thermosphere). இங்கே வெப்பம் 1,000 டிகிரி வரை இருக்கும். இது 100 -650 கி.மீ உய்ரம் வரை பரவி இருக்கிறது. வானின் அரோரா ஒளி உருவாவதும், விண்வெளி ஓடங்கள் பறப்பதும் இப்பகுதியில்தான். சர்வதேச விண்வெளி நிலையங்கள் இங்கேதான், 320 -380 கி.மீ உயரத்தில் இருக்கின்றன. 5வது அடுக்கான வெளிமண்டலம் (Exosphere) உள்ளது. இது 650 -10,000,௦௦௦ கி.மீ வரை இருக்கிறது. இதுதான் பூமியின் வளி மண்டலத்தின் கடைசிப்பகுதி. இதற்குப் பின் இப்பகுதி வான்வெளியுடன் இரண்டறக்கலந்து விடுகிறது. இங்கே ஹீலியமும், ஹைடிரஜனும் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதி மிக மிக மெலிதாக உள்ளது.  

ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்களின் இணைப்பு. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயு. இது நிலையானது. ஆனால் ஓசோன் வாயுவின் இணைப்பு நிலையற்றது. உலகம் உருவானபோது ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தாவரங்கள் உருவான பின்புதான் உருவானது. அப்போது 1,500,000,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன் இருந்த உயிரிகள் ஆக்சிஜனின்றி, ஹைடிரஜனை வெளியேற்றி உயிர் வாழ்ந்தன. உலகம் முழுவதும் குளோரோபில் உள்ள சயனோ பாக்டீரியா என்ற ஆல்கா (240 கோடி ஆண்டுகளுக்கு முன்)பரவலாகி, ஒளிச் சேர்க்கையின் உபரிப்பொருளாக ஆக்சிஜனை வெளிவிட்டது. அதனால் வளிமண்டலத்தின் ஆக்சிஜன் அளவும் பெருகியது. ஒரு கால கட்டத்தில் புவியில் தாவரங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. சயனோ பாக்டீரியா ஆக்சிஜன் வாயுவை உருவாக்கவில்லை என்றால், மீவளி மண்டலத்தின் ஓசோன் அடுக்கு உண்டாகியே இருக்காது.

   ozone_370ஓசோன் வாயு இருபக்கமும் பதப்படுத்தப்பட்ட கூரான கத்திக்கு இணையானது. ஓசோன் பூமிக்கு அருகில் இருக்கும்போது, அதனை நாம் சுவாசித்தால் நமக்கு தீங்கு விளைவிக்கும். அரித்துவிடும். ஆனால் இது மீவளி மண்டலத்தின் அடிப்பகுதியில் அடர்வாக இருக்கும்போது, இது சூரியனிடமிருந்து வரும் உயிரிகளுக்கு கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்களை வடிகட்டி விடுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் இல்லை என்றால் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மைக் காக்க ஓர் சிறப்பு உடையை/காப்புக் கவசத்தை நாம் அணிய வேண்டியிருக்கும். ஏனெனில் புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்கி தோல் புற்று நோயையும், கண் நோய்களையும் உண்டாக்கி, நம்மை சிதைத்து விடும். 
   
 வளிமண்டலத்திலுள்ள ஓசோன் அடுக்கில் 90 % இயற்கையானது. நமக்கு நன்மை விளைவிப்பதுதும் கூட. ஆனால் மீதியுள்ள 10% கெடுதி விளைவிக்கும் ஓசோன். இது சிற்றுந்து, பேருந்து மூலம் வெளியாகும் புகையிலிருந்து உருவாவதாகும். ஒளிவேதியியல் இயந்திர இயக்கத்தின் (photo chemistry mechanics mechanism) மூலம் ஓசோன் அடுக்கு உருவாகும் வித்தையை பிரிட்டிஷ் இயற்பியலாளர் சிட்னி சாப்மீன் 1930களில் கண்டுபிடித்தார். மீவளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவிலுள்ள ஆக்சிஜன் அணுக்களில் புறஊதாக்கதிர்கள் தாக்கி, தனித் தனி ஆக்சிஜன் அணுக்களாக உடைக்கிறது. உடைக்க முடியாத ஆக்சிஜன் வாயுவுடன் ஒற்றை ஆக்சிஜன் அணு இணைந்து, அங்கு மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ள ஓசோனாக உருவாகிறது. புறஊதாக்கதிர் மீண்டும் மீண்டும் ஓசோனைத் தாக்கி இதனை, ஆக்சிஜன் வாயுவாகவும், ஆக்சிஜன் அணுக்களாகவும் மாற்றி விடுகிறது. பின்னர் இவை நிறைய சேர்ந்த பின் இதுவே ஓசோன் அடுக்காகிறது. இது ஒரு தொடர் வினையாக நிகழ்ந்து, ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி(Ozone-oxygen cycle) நடக்கிறது.
 
 ஓசோன் சுவிஸ் வேதியலாளர் கிறிஸ்டியன் பிரட்ரிச் ச்கொன்பெயின் என்பவர்தான் ஓசோன் இருப்பதைக் கண்டுபிடித்தார். காற்றிலுள்ள 10,௦௦௦000 மூலக்கூறுகளுக்கு 10 அல்லது அதற்கும் குறைவான ஓசோன் மூலக்கூறுகள் எனற அளவிலேயே உள்ளன. 1980களில் ஓசோன் அடுக்கில் உலகின் வடபகுதியான அண்டார்டிக்காவில், வசந்தகாலத்தில் (Spring season) ஒரு ஓட்டை இருந்தது கண்டறியப்பட்டது. ஓட்டை என்றால் ஓசோனில் யாரும் ஊசியை எடுத்து குத்தி ஓட்டை போடவில்லை. ஓசோனில் ஏற்பட்ட இந்த ஓட்டையானது மனிதர்களாலும், மனித செயல்பாடுகளால் வெளிப்படும் குளோரோபுளூரோ கார்பன்களாலும் (Chloroflurocarbons) தான் ஓசோன் அடுக்கில் ஓட்டை உண்டாகி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்களால் அறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓசோன் அடுக்கு, கட்டுறா அயனிகளால் தான் பாதிக்கப்படுகிறது. நைட்டிரிக் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, ஹைடிராக்சைல், குளோரின் மற்றும் புரோமின் போன்றவைதான் இந்த உடைப்புப் பணியைச் செய்கின்றன.
 
 அண்டார்டிக்கில் உள்ள ஓசோன் ஓட்டையை 1985ல் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளாலான ஜோசப் பார்மான், பிரியன் கார்டினர் மற்றும் ஜோனாதன் ஷான்க்ளின் போன்றோர் அண்டார்க்டிக் பகுதி கணக்கெடுப்பின்போது கண்டறிந்தனர். அந்த பகுதியிலுள்ள ஓசோன் அடுக்கில் ஓசோனின் அளவு குறைந்திருந்ததே, அதன் கனம் மெலிதானதாய் இருந்ததே ஓசோனில் ஓட்டை என்று சொல்லப்படுகிறது. ஓசோனின் ஓட்டை என்பது பத்தாண்டுகளுக்கு 4% என்ற அளவில் சீராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர வர ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு வசந்தத்தின்போது ஓசோன் ஓட்டையின் அளவு ஆகஸ்ட் 2011ல் 40 % இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

     மனிதனால் வெளியிடப்படும் ஓசோன் பாதிப்பு பொருள்கள்,    சக்தி மிக்க பசுமையகப் பொருட்களாக (potent greenhouse gases) செயல்படுகின்றன. அவற்றில் சில பொருள்கள் கரியுமில வாயுவைவிட 1,400 மடங்கு வீரியம் மிக்கவை. எனவே இவையும் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும், வெப்ப மயமாதலுக்கும் மிகவும் துணை போகின்றன. 

   உலக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஓசோன் அடுக்கின் முக்கியத்துவத்தை எண்ணி, அதனைப் பாதுகாக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் செப்டம்பர் 16. அதனை உலக ஓசோன் தினமாக அறிவித்துள்ளனர். 1987ல் உலகின் 24 நாடுகள் மாண்ட்ரியலில் ஒன்றிணைந்து இனிமேலுக்காவது ஓசோனை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டன. இந்த தினம் என்பது மாண்ட்ரியல் புரோட்டோகாலில், ஓசோன் அடுக்கில் ஓசோன் அளவு குறைவது தொடர்பாய் 1987 ல் கையெழுத்திட்ட தினம்தான்.

   ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 லிலிருந்து செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக அறிவித்து அனுசரிக்க அழைப்பு விடுத்தது. அனைத்து நாடுகளும் ஓசோன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். ஓசோன் படலம் என்பது பூமியின் சூரிய தடுப்புத் திரைதான் ..! இதனைப் பாதுகாத்தால் தான், உயிர்களின் நீடித்த வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். இதற்காக, மூன்று Pக்களை முன் வைக்கின்றனர்.

1. Planet : புவிக்கோள்.. பெரும்பாலான தாவரங்கள் புறஊதாக்கதிர் களிடமிருந்து இயற்கையிலேயே தங்களைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் எப்போதும் அல்ல. எந்த பாதுகாப்பு கவசம் இல்லாத கடல், ஏரிகளில் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவிச் சென்று, குறைந்த ஆழத்தில் வாழும் மீன்கள் மற்றும் மிதவை உயிரிகளைப் பாதிக்கின்றன.

2. People மக்கள்: அளவுக்கு அதிகமாக வெய்யிலில் இருப்பதனால், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சூரிய எரிப்பு காயம் உண்டாக்குகிறது; கண் பார்வையை பாதிக்கிறது. சூரிய ஒளியில் இருப்பது நீண்ட காலம் தொடர்ந்தால், தோல் புற்று நோய் வருகிறது. மேலும் புற ஊதாக்கதிர் தற்காப்புத் திறனுக்கும் தடை போடுகிறதாம்.

3. Prosperity வளங்கள்: ஓசோன் அடுக்கின் கணம் குறைவதால், மக்களுக்கும் புவிக்கும் பாதிப்பு உண்டு பண்ணும்போது, அதன் தொடர் நடவடிக்கையாக ஏராளமான பொருளாதார இழப்பும் அதன் சங்கிலித் தொடர் நிகழ்வுகளும் உண்டாகின்றன.

 மக்களுக்கு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உணர்வை உண்டுபண்ண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

1. உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் ஓசோனை பாதிக்கும் பொருட்களை தவிர்பதையும், ஓசோன் பாதுகாப்பு நடக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

2.   ஓசோனைப்பாதுகாக்க எளிய நடைமுறைகளைக் கைக்கொண்டால்              போதுமானது.

3. இது தொடர்பான விழிப்புணர்வையும், தாக்கத்தையும் மக்கள் மனதில் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

4. சூழல் தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

5. சூழல் நட்பற்ற பொருட்களைத் தவிக்க வேண்டும்.

6. எத்தனை நீண்ட பயணமும் கூட, முதல் அடி வைப்பதில்தான் துவங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட, சூழலைப் பாதுகாப்பதாகவும், ஓசோனைக் காப்பதாகவும் இருக்க வேண்டும்.

7. காற்றுக் குமிழிகளை உடைக்கும் தெளிப்பான்களை (Sprayers ) தவிர்க்கவேண்டும்.

8. குளோரோ புளூரோ கார்பன்(CFC) வெளியேற்றும் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.

9. ஹாலோஜென் வாயு உள்ள தீயணைப்பானுக்குப் பதிலாக வேறு பொருள் உள்ளதைப் பயன்படுத்த வேண்டும்.

10. சபிக் காபுரையிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.

11. குளிர் சாதன அறையை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அதன் மூலம் வெளிவிடும் நிறைய CFC வளிமண்டலத்திற்குள் நுழையும்.

12. சிற்றுந்தின் உறைபனிப் பெட்டியையும், குளிர் சாதனத்தையும் சரியாகப் பராமார்க்க வேண்டும். அவை சரியாக இயங்காவிட்டாலும் CFC வெளியேறி ஓசோன் படலத்தை தாக்கும்.

13. புதிதாக குளிர் சாதனப் பெட்டி வாங்குவோர், CFC இல்லாத பெட்டியாகப் பார்த்து வாங்கவேண்டும்.

14. புரோமோமீதேன்(bromomethane ) உள்ள பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.

15. காற்று மாசுபாடு பொருள்களையும் தவிர்க்கவும்.

16. சிற்றுந்து, கம்ப்பிரஷர்(compressors) மற்றும் குளிர் சாதனப் பெட்டி பயன்படுத்துவதைக் குறைக்கவும்.

17. இதற்கு மாற்றாக பேருந்து, மிதிவண்டி மற்றும் நடைப் பயணத்தை மேற்கொள்ளவும்.

18. ஆற்றல் குறைவாக உள்ள மின் பல்புகளைப் பயன்படுத்தவும். இதனால் மாசுபாடு குறையும்.

19. ஓசோன் அடுக்கின் ஓட்டையைக் குறைப்பது/ நிறுத்துவது என்பது, அதனைப் பாதிக்கும் பொருட்களைத தவிர்ப்பது மட்டும்தான், ஓசோன் படலம் பாதுகாப்புப் பணி மற்றும் உதவி செய்ய முடியும்.

20. மாணவர்கள், தன்னார்வலர்கள், சூழலியலாளர்கள், சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் என உலகத்தின் மீதும், உயிரினங்கள் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்: இதனை மக்களிடம் பரப்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக